போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5


துரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ்பஸ்நிலையத்தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடைஅட்டையில் தன்னிடம் இருந்த குமிழ்முனைப் பேனாவினால் T.N.T என எழுதிவிட்டு அதனைமேலும் அழகுபடுத்தும் முயற்சியில் கலாபதி ஈடுபட்டிருந்தார்.  T.N.T என்பது ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற தமிழ்ப்பதத்தினை நேரிடையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்பதால் உருவாகும் TAMIL NEW TIGERS என்பதன் முதலெழுத்துக்கள் இணைந்த குறியீடாகும்.

1974 இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பி பிரபாகரன் சந்தித்துக் கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ. இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்த இடமாக கொண்ட இவர் 04.05.1926 இல் பிறந்திருந்தார். அரச ஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனி அரசு வேண்டும் என்பதற்காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளலாம். தந்தை செல்வநாயகத்தின் தலைமையில் தீவிர அகிம்சைப் போராளியாக முன்முகம் காட்டிய இவர் 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர்சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு.ஆடியபாதம்  என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர்.  அத்துடன் 1965இல் அதன் இணைப்பொதுச் செயலாளராக கடமையாற்றினார்.

தமிழரசுக்கட்சியின் தீவிரம் போதாது என கொள்கைரீதியாக முரண்பட்டு 1969இல் திரு எ. நவரத்தினத்தால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர்சுயாட்சிக்கழகத்தில் இணைந்து அதன் தீவிர விசுவாசியாகவும் விளங்கினார்;. 1970இன் இறுதியில் தோன்றி தமிழ்இன உணர்வுடன் இளைஞர்களை ஆயுதப்போரிற்கு அணிதிரட்டிய தமிழ்மாணவர் பேரவையினருக்கு தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகளைப்புரிந்து வந்தார்.  1972இன் இறுதியில் தமிழ் நாட்டுத்தலைவர்களை சந்திப்பதற்காக இந்தியா சென்றிருந்த தமிழர்கூட்டணியின் அன்றையதலைவரான செல்வநாயகம்  தளபதி அமிர்தலிங்கம் என்பவர்களுக்கு முன்பாகவே அங்குசென்று அவர்களின் பயண ஏற்பாட்டை புரிந்த செயல் வீரர் இவராவர்.

1973 தை 15இல் நடந்த மண்கும்பான் குண்டுவெடிப்பு முயற்சியைதொடர்ந்து மாணவர் பேரவையின் தலைவர்; சத்தியசீலன் உட்பட அதன் பெரும்பாலான அங்கத்தவர்களும் அவர்களிற்கு ஆதரவளித்த பலரும் கைதுசெய்யப்பட்டனர். இவ்வகையில் பொட்டாசியம் என்னும் இராசயனப்பொருளை மாணவர் பேரவையினருக்கு கொழும்பில் இருந்து அனுப்பினார் என்ற குற்றச்சாட்டில் இவரையும் கைதுசெய்ய பொலிசார் தேடியலைந்தனர். இதனால் மீண்டும் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்ற இராசரத்தினம் அங்கேயே தங்கநேர்ந்தது. தான்சார்ந்த கட்சியினரால் கைவிடப்பட்டு ஆஸ்துமாநோயினால் வருந்திய நிலையில் மிகுந்த பொருளாதார கஸ்டத்தின் மத்தியில் சென்னையில் வாழ்ந்த இவர் திரு இரா. ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி போன்றவர்களின் தயவில் தனது காலத்தைக் கழித்துவந்தார்.

ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தில் நாட்டம்கொண்ட குழுவினர்கள் பலரும் 1972ஆம் ஆண்டின் பல்வேறு நிலைகளைக் கடந்து 1973 — 1974 இன் இறுதிக் காலப்பகுதிகளில்  சென்னையிலேயே கழிக்கநேர்ந்தது. 1974ஆகஸ்டில் பெரியசோதி தங்கத்துரை நடேசுதாஸன் என்பவர்களுடன் வேதாரணியத்திலிருந்து சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் கோடம்பாக்கத்திலேயே தங்கியிருந்தார். ஒரே நோக்கத்தை கொண்ட இளைஞர்கள் பல்வேறுகுழுக்களாக பிரிந்து செயல்பட்டதை கண்ட வயதிலும் அனுபவத்திலும்  மூத்த இராசரெத்தினம் மிகுந்த வேதனைப்பட்டார்.

                        தமிழகம் சென்ற தமிழரசுக்கட்சியினருடன் இடது கோடியில்  
                                                                  இராசரெத்தினம்

இதனால் ஈழவிடுதலைக்காக போராடமுன்வந்த எல்லோரையும் இணைத்து தனியான ஒரு விடுதலைப்படையை உருவாக்க வேண்டுமென்ற நன் நோக்கில் சென்னையில் தங்கியிருந்த இளைஞர்களிடம் தனது பரப்புரையை மேற்கொண்டுவந்தார்.  தமிழரின்படைக்கு தனியான  நிறம் உடை கொண்டதான இராணுவக் கட்டமைப்பை பற்றியும் தனது நோக்கில் ஐம்பதினாயிரம் தமிழ் இளைஞர்களை சேர்க்கவேண்டுமென்ற தனது உள்ளக்கிடக்கைகளையும் மேற்படி இளைஞர்களிடம் விதைக்கமுயன்றார். இதனைவிட இனவிடுதலை சம்பந்தமான பலநூல்களை படித்தும் சேகரித்தும் அவைபற்றி மேற்படி இளைஞர்களிடம் கூறிவந்தார்.

The History of Thamiraparni  எனும் ஈழத்தமிழர்களின் வரலாறு கூறும் நூலொன்றையும் இக்காலத்தில் இவர் எழுதிவந்தார். (இவரது மறைவின்பின் இப்புத்தகம் இரா.ஜனார்தனத்தினால் வெளியிடப்பட்டது)   இதன்மூலம் இலங்கையின் அல்லது ஈழத்தின் புரதானபெயரான ‘தாமிரபரணி’ என்ற பெயரை இவர் உள்வாங்கிக்கொண்டுள்ளார் எனலாம். ஏனேனில் 1974யூன் 1ந்திகதி தான் வாசித்ததாக தனதுடயரியில் இவர் குறிப்பிட்டிருக்கும்  Notices of  South India From Magesthens To Mahun என்னும் நூலில் ஈழத்தின் மூத்தகுடியினர் தமிழர்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் இருந்ததாகவும் அதைக்கண்டு தான் மகிழ்வடைவதாகவும் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இங்கு Magesthens (மொகஸ்தனிஸ்)  என குறிப்பிடப்பட்டுள்ளவர் கிறிஸ்துவிற்குமுன்  மூன்றாம்நூற்றாண்டைச் சேர்ந்த சந்திரகுப்தமௌரியரின் அரசசபையில் கிரேக்கதூதராக இருந்தவர்.  கிரேக்க மொழியில் இவர் எழுதிய அக்காலகுறிப்புகளில் இலங்கையை ‘தப்ரபேன்’ எனக் குறித்துள்ளார்.

இதனையே பாளிமொழியில் எழுதப்பட்ட  மகாவம்சம் ‘தம்பபண்ணி’ என குறிப்பிடுகின்றமையும் இங்கே நோக்கத்தக்கது. ஈழம் என முழுமையான பெயரைக் குறிப்பிடும் தமிழ்இலக்கிய சான்று கிபி இரண்டாம்நூற்றாண்டில் கரிகாலன் காலத்தில் எழுதப்பட்ட ‘பட்டினப்பாலை’ எனும் நுலாகும். மேற்படியுள்ள பலகாரணிகளால் ஈழம் என்பதன் முந்தைய பெயரான தாமிரபரணி என்னும் பெயரை ஈழத் தமிழர்களின் தனிநாட்டிற்கான பெயராக திரு.ஆ. இராசரத்தினம் எடுத்துக் கொண்டார். ‘புலி’ என்பது தமிழர்களின் அரசவம்சத்தில் முதன்மையானவர்களாக கருதப்படும் சோழர்களின் இலச்சினையாகும். இத்தகைய தாமிரபரணி மற்றும் புலி எனும் கருத்துப் பொதிந்த சொற்களை இணைத்து ‘தாமிரபரணி புதிய புலிகள்’ என்னும் பெயரை இராசரத்தினம் உருவாக்கினார்.


                               
                                          மாமனிதர்    இராசரத்தினத்தின்   நாட்குறிப்பு

இவர் தனது 1974செப்டெம்பர் 04ந் திகதிக்கான நாட்குறிப்பில் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்னும்பெயரை உருவாக்கிக் கொடுத்தேன். அதன் உள்ளார்த்தத்தை விளக்கித் தங்கத்திடம் கூறினேன்.  எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தங்கம் எனக்குறிப்பிடப்படுபவர் யாரிடமும் மனம் கோளாமல் நடப்பவரும் தங்கண்ணா என தலைவர் பிரபாகரனினால்; அழைக்கப்பட்ட போராட்ட முன்னோடியான ‘தங்கத்துரையாகும். தாமிரபரணி அல்லது தாமிரபர்ணி புதிய புலிகள் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்ககுறியீடு; T.N.T என்பதேயாகும். 1974ஆகஸ்டில் சென்னைக்குவந்த தலைவர் பிரபாகரனும் இராசரத்தினமும் மனம்திறந்த நட்புடன் ஆளையால் புரிந்துகொண்டு பழகிவந்தனர். தந்தைமகன் போன்ற வயதுடன் காணப்பட்ட இவர்கள் தமது பசிபட்டினியை மறந்து கன்னிமாரா நூல்நிலையத்தில் பலமணிநேரங்களை செலவிட்டனர்.

ஈழத்தமிழர்களிற்கான விடிவு தனிநாடு தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் உலகவரலாறு  இந்தியவரலாறு  இலங்கை வரலாறு எனப் பலவரலாற்று நூல்களில் மூழ்கிய இவர்கள் அங்கிருந்தே தமக்கான மாற்று (இயக்க)ப் பெயர்களையும் இக்காலத்தில் தேடிக்கொண்டனர். தலைவர் தனது பெயராக சோழமன்னன ‘கரிகாலன்’ என்பதையும் இராசரத்தினம் ஈழமன்னன் எல்லாளன் (ஈழாளன்) என்பதனையும் தமது மாற்றுப்பெயர்களாக வகுத்துக் கொண்டனர்.

இத்தகைய இவரின் தனிநாடு பற்றிய கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட தலைவரின் மனத்திலும் ‘தாமிரபரணி புதியபுலிகள்’ என்றபெயர் விருப்பத்திற்குரியதாகியது. ஏனெனின் எப்பொழுதும் தீவிரவாத செயற்பாடுகளில் முன்னின்ற தலைவரால் நேசிக்கப்பட்ட வெடிமருந்தின் பெயரும் T.N.T என்பதாகும். மேற்படி இரண்டுபெயர்களும் எவ்விதமாறு பாடுமின்றி T.N.T எனவருவதனால் தலைவரால் இப்பெயர் பெரிதும் விரும்பப் பட்டது. இதன்வழியில் தமிழின உணர்வில் உந்தப்பட்டு வழிநடந்த தலைவர்; பிரபாகரன் விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத இயக்கத்தை உருவாக்கியபோது தாமிரபரணி என்னும் பிரதேசத்தின் பெயரால் தியாகி  இராசரத்தினத்தால் உருவாக்கப்பட்ட பெயரினை அவரின் மனம் கோணாமல் அப்படியே ஆங்கிலத்தில் T.N.T என்பதன் உருவமும் சிதைவுறாமல் ‘புதிய தமிழ்ப் புலிகள்’ என இனத்தின் பெயரால் தான் உருவாக்கிய இயக்கத்திற்கு பெயராக்கிக்கொண்டார். இதனையே துரையப்பாவை எதிர்பார்த்து தவைர் பிரபாகரனுடன் காத்திருந்த முதன்நிலைப் போராளியான கலாபதி T.N.T என எழுதிவைத்தார்.

சென்னை வைத்தியசாலையில் அநாதையாக மரணித்த ஈழத்தின் முதலாவது மாமனிதர் ஆ.இராசரெத்தினம்.


T.N.T என்ற பெயரினை அப்பழுக்கின்றி முன்மொழிந்த இராசரெத்தினம் அப்பெயர்கொண்ட அமைப்பினால் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார். என்பதை அறிந்து மகிழ்வடைந்த நிலையில் 19.08.1975 இல் ஆஸ்துமா நோயின் தாக்கத்தால் சென்னையில் இயற்கையெய்தினார்.  சென்னையில் பரிதாபத்திற்கு உரியவராக வாழ்ந்த அவரை தமிழ்நாடு சென்ற வேளைகளிலெல்லாம் சந்திக்க மறுத்த தமிழரசுக்கட்சித் தலைவர்கள்   தியாகவாழ்வு வாழந்த அவர் மறைந்தபின் ‘ஈழத்து நேதாஜி’  எனப்பட்டமளித்து தமக்குரிமை கொண்டாடினர்.  மானசீகமாக தனக்கேற்ற அறிவுரைகள் வழஙகிய இராசரத்தினத்தை 1990இல் அவருடைய  சொந்த இடமான சாவகச்சேரியில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழ்ஈழத்தின் முதலாவது ‘மாமனிதர்’என பட்டமளித்து தலைவர்பிரபாகரன் பெருமைப்படுத்தினார்.


இராசரெத்தினத்தின் மகளே 1991 மே21 இல் நடைபெற்ற இராஜீவ்காந்தி கொலைவழக்கில் தற்கொலை குண்டுதாரியாக குற்றம் சாட்டப்பெற்ற தனு என நம்பப்படுகின்றது.

“வருணகுலத்தான் பார்வையில்’ 



போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 2

போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும், விழுந்த துரையப்பாவும்-பகுதி 1

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment